Wednesday, July 23, 2014

சிறுபீளையின் மருத்துவப் பயன்கள் :-

மூலிகையின் பெயர் -: சிறுபீளை.
வேறுபெயர்கள் -: சிறுகண்பீளை, கண் பீளை, கற்பேதி,பெரும் பீளை என்ற இனமும் உண்டு.
தாவர அமைப்பு -: இது சிறு செடிவகையைச் சார்ந்ததுஇந்தியாவில் ஈரப்பாங்கான இடங்களில் பரவலாக வளர்கிறது.இதன் இலைகள் சிறியதாக நீள் வட்டவடிவில் இருக்கும்,ஒவ்வொரு இலைக்கும் இடையில் பூக்கள் இருக்கும்,பூக்கள் தண்டுடன் ஒட்டி அவல் போன்ற வடிவமாக இருக்கும்.
பயன் படும் பாகங்கள் -: சிறு பீளையின் எல்லாபாகமும்மருத்துவதற்குப் பயன்படுத்தப் படுகிறது.
செய்கை -: இது சிறு நீரைப் பெருக்கி, கற்களை கரைக்கும்செய்கை உடையது.
மருத்துவப் பயன்கள் -: சிறுபீளைச் செடிக்குத் தேகம் வெளிறல், அசிர்க்கா ரோகம், வாத மூத்திரக் கிரிச்சபம் முத்தோஷம், மூத்திரச் சிக்கல், அஸ்மரி, அந்திர பித்த வாதும் சோனித வாதங்கள் ஆகியன போம் என்க.
சிறு கண் பீளை இலையை இடித்து சாறு எடுத்து பதினைந்து மி.லி.வீதம் மூன்று வேளை அருந்தி வரநீர் எரிச்சல், நீரடைப்பு, பெண்களுக்கு மாதவிலக்கின் போது உண்டாகும் அதிகமான ரத்தப் போக்கு முதலியவை குணமாகும்.
கருத்தரித்த பெண்களுக்கு ஏற்படும் தளர்ச்சியை நீக்கி உடலுக்கு வன்மை கொடுக்க இதன் வேரைக் கொண்டு செய்யப்படும் கஞ்சி நல்லது.
சிறுகண் பீளை வேர்ப்பட்டையையும், பனைவெல்லத்தையும் சம அளவாக எடுத்து நன்கு அரைத்து இருநூறு மி.லி.பசும் பாலுடன் கலந்து தினந்தோறும் இரண்டு வேளை அருந்தி வந்தால் நீரடைப்பு, கல்லடைப்பு, முதலிய நோய்கள்குணமாகும்.
சிறுகண் பீளையின் எல்லா பாகங்களையும், பேராமுட்டிவேர், நாகலிங்க வேர், சிறுநெருஞ்சில், இவைகளையும்சம அளவாக எடுத்து, தேவையான அளவு நீர்விட்டுக்காய்ச்சி வடிகட்டி கல்லடைப்பு, நீரடைப்பு, மற்றும் சிறு நீரக நோய்களுக்குக் கொடுத்து வரலாம். இதனையே படிகாரம், வெடியுப்பு, நண்டுக்கல் இவைகளைக் கொண்டு செய்யப் படும் பற்பங்களுக்கு துணை மருந்தாகவும் கொடுத்து வரலாம்.
சிறு பீளை வேரில் அரைப்பலம் பஞ்சுபோல் தட்டி அரைப்படி நீரில் போட்டு வீசம் படியாகச் சுண்டக் காய்ச்சிவடிகட்டி உள்ளுக்கு இரண்டு வேளை கொடுக்க நீர்கட்டைஉடைக்கும். நாகத்தைச் சுத்தி செய்து கடாயிலிட்டுகண்ணான் உலையில் வைத்து ஊதிக் கடாயானது நெருப்பைப்போல் இருக்கும் போது சிறு பீளையை பொடியாக வெட்டிப்போட்டுக் கரண்டியினால் துழாவிக் கொடுக்கப் பூத்தபற்ப மாகும். ஆறவிட்டு வஸ்திரகாயம் செய்து 1 - 1.5குன்றி எடை நெய், வெண்ணெய் முதலியவற்றில் தினம்இரண்டு வேளை கொடுக்க நீர் கட்டை உடைக்கும்.வெள்ளை, வேட்டை குணமாகும்.
பெரும் பீளையானது மிகு சோமையும், பைசாசு முதலியசங்கை தோஷமும், கல்லடைப்பு முதலிய சில ரோகங்களும் தீரும்.
இதன் வேரைத்தட்டி அரைப் பலம் எடைக்கு ஒரு குடுவையில்போட்டு அரைப்படி சலம் விட்டு வீசம் படியாகச் சுண்டகாய்ச்சி வடிகட்டி வேளைக்கு
1 - 1.5 அவுன்ஸ் அளவு தினம் 2 -3 வேளை உட்கொள்ள நீர்கட்டு, கல்லடைப்பு, சதையடைப்பு போம். இதன் கியாழம் பாஷாணங்களின் வீறை அடக்கும்.
இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!
மனிதநேய விதைகளாய் மாறுவோம்..! 

Tuesday, July 22, 2014

ஜலதோசம், மூக்கடைப்பு :-

ஜலதோசம், மூக்கடைப்பு எந்தவிதமான பக்க விளைவுகளும் மாத்திரைகளும் இல்லாமல் உடனடி நிவாரணம் . . .
உலகிலே மிகப்பெரிய நோய் என்று சொல்லக்கூடிய நோய்களில் ஒன்று தான் ஜலதோசம், மூக்கில் இருந்து தண்ணீர் வடிந்து கொண்டே இருக்கிறது அதோடு தலைவலி, மூக்கடைப்பு என அனைத்தும் இருக்கிறது இதற்கு சித்த மருத்துவத்தில் உடனடியாக தீர்வு காண பல மருந்துகள் புத்தகத்தில் படித்தாலும் எந்த மருந்துமே உடனடியாக வேலை செய்யவில்லை என்று பலர் இமெயிலில் தெரியப்படுத்தி இருந்தனர். மிக மிக உடனடியாக ஜலதோசத்தை குணப்படுத்தும் மருந்துகள் குருநாதர் அகத்தியரில் நூலில் நிறைந்து கிடைக்கிறது. உதாரணமாக நூலில் இருந்து ஒரு மருந்தை எடுத்து 10 பேருக்கு கொடுத்து பார்த்தோம் உடனடியாக தீர்வு கிடைத்தது.
முதலில் ஜலதோசம் ஏன் வருகிறது என்று பார்த்தால் குறிப்பிட்ட வைரஸால், தலையில் ( மண்டையில் ) நீர் சேர்வதால் வருகிறது, ஜலதோசம் வருவது நல்லது தான் மண்டையில் இருக்கும் நீரை மூக்கின் வழியாக வெளியே தள்ளிக்கொண்டே இருக்கிறது, தொடர்ந்து சளி பிடித்து தும்மல் வருவதாலும், மூக்கில் இருக்கும் நீரை பல முறை வெளியே சிந்துவதாலும் மூக்கில் வலியும் தொண்டையில் வேதனையும் தான் அதிகமாகிறது. ஜலதோசம் வரும் முன்னே நமக்கு தெரிந்துவிடும் எப்படி என்றால் தொண்டையில் சற்று வலி போன்று எரிச்சல் ஏற்படும் இதிலிருந்தே நமக்கு ஜலதோசம் வரப்போகிறது என்பதை கண்டுபிடிக்கலாம். இந்த நேரத்தில் நாம் 13 மிளகு எண்ணி எடுத்து மென்று சாப்பிட வேண்டும். தூசு குப்பையினால் மூக்கில் ஏற்படும் அலர்ஜி (Dust allergy) போன்றவைகளினால் வரும் ஜலதோசம் மிளகு சாப்பிட்ட 15 நிமிடத்திற்குள்ளே குணமாகும்.
மஞ்சள் பொடி மற்றும் சுண்ணாம்பு :
மண்டையில் நீர் சேர்ந்திருப்பதால் ஏற்படும் ஜலதோசம் மிளகு சாப்பிட்டால் கட்டுக்குள் வருமே தவிர முழுமையான குணம் கிடைக்காது.தலையில் சேர்த்திருக்கும் நீரை எடுப்பதற்கான மருந்தை சற்றுவிரிவாகத் தெரியப்படுத்துகிறோம். அகத்தியர் தன் நூலில் அக்கினிசேகரத்தையும் வெள்ளை-யையும் சேர்த்தால் இரத்தம் வரும் இதை பூசினால் உடனடியாக குணம் கிடைக்கும் என்று தெரியப்படுத்தி இருந்தார். வெளியே இருந்து பார்ப்பதற்கு ஏன் இப்படி குழப்பி இருக்கிறார் என்று நினைக்கத்தோன்றும் ஆனால் உண்மையில் சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் இந்த எளியவனுக்கும் தெரியப்படுத்திவிட்டார் என்றே தோன்றியது. அக்கினிசேகரம் என்றால் மஞ்சளையும், வெள்ளை என்றால் வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு -ஐ குறிக்கும். இரண்டும் சேர்த்தால் இரத்தமான சிகப்பு வண்ணத்தில் கிடைக்கும். மருந்து கிடைத்தாச்சு ஆனால் எந்த மருந்தையும் சோதிக்காமல் வெளியே தெரியப்படுத்தியது கிடையாது.
ஜலதோசத்துடன் யாராவது வந்தால் சோதித்து பின் தெரியப்படுத்தலாம் என்று வைத்துவிட்டோம். இரண்டு நாள் கழித்து நம் நண்பர் ஒருவர் ஜலதோசத்திற்கு ஏதாவது மருந்து இருக்கிறதா என்று தாமாக வந்து கேட்டார். உடனடியாக நாம் அவர் வீட்டிற்கு வெற்றிலைக்கு வைக்கும் சுண்ணாம்பு ஒரு சிறிய பாக்கெட் வாங்கிக்கொண்டு சென்றோம். அவர் அம்மாவிடம் மஞ்சள் பொடி எடுத்து வரச்சொன்னோம். (சிறிய ஸ்பூன் ) இரண்டு ஸ்பூன் மஞ்சள் பொடி 1/4 ஸ்பூன் அளவு சுண்ணாம்பு எடுத்து சிறிது தண்ணீர் விட்டு பூசுவதற்கு தகுந்தாற்போல் கலந்தோம்.(படத்தில் மேலே காட்டப்பட்டுள்ளது) மண்ண்டையைச்சுற்றி நெற்றியிலும் மூக்கின் மேலும் இதை பூச வேண்டும் என்று சொல்லி அவங்க அம்மாவிடம் கொடுத்தோம். அவர்கள் முதலில் கேட்டது சுண்ணாம்பு தேய்ப்பதால் நெற்றி புண்ணாகிவிடுமோ என்ற பயம் இருக்கிறது என்றார், மஞ்சள் சேர்வதால் உங்களுக்கு பயமே வேண்டாம் எக்காரணம் கொண்டும் புண்ணாகாது என்று சொல்லி பூசக்கூறினோம். நண்பரின் நெற்றி முழுவதும் மற்றும் மூக்கிலும் இந்தக்கலவையை அவர் அம்மாவே பூசிவிட்டார்.
1 மணி நேரம் நன்றாக தூங்க சொல்லிவிட்டு பிறகு வந்து பார்ப்பதாக கூறிவிட்டு சென்றோம். சரியாக மூன்று மணி நேரம் நன்றாக அசந்து தூங்கியுள்ளார் அதன் பின் நேரடியாக நம் வீட்டிற்கு வந்தார் ஜலதோசம் சளி பிடித்தற்கான எந்த அறிகுறியும் இல்லை. மண்டையில் இருக்கும் அத்தனை நீரையும் சுண்ணாம்பு எடுத்துவிட்டது என்று மகிழ்ச்சியுடன் கூறி விட்டு சென்றார். குருநாதாரின் அன்பை என்ன சொல்வேன். நன்றியை அப்படியே குருநாதருக்கு சமர்பித்தோம். சில நாட்கள் கழித்து இவரின் தெருவில் 10 வயதுள்ள ஒரு சிறுவன் இதே போல் நெற்றியில் நம் சுண்ணாம்பு கலவை பூசிக்கொண்டு செல்வதைக்கண்டு அவனை அழைத்து ஏன் நெற்றியில் ஏதோ பூசி இருக்கிறாயே என்று கேட்டோம் அவன் உடனே நம் நண்பரின் வீட்டை காட்டி அவர் தான் பூசிவிட்டார் என்று கூறினார்.
உடனடியாக நம் நண்பரை அழைத்து எத்தனை பேருக்கு இதே போல் பூசிவிட்டாய் என்று கேட்டோம். அவர் கொஞ்சம் காத்திருக்குமாறு கூறிவிட்டு வெளியே சென்று 10 நபர்களை அழைத்து வந்தார் இத்தனை பேருக்கும் ஜலதோசத்திற்கு மருந்து கொடுத்து உடனடி குணம் கிடைத்தது என்றார். 10 பேரிடமும் தனித்தனியாக விசாரித்ததில் கிடைத்த சில தகவல்கள் மருந்து பூசிய பின் தூக்கம் வருகிறது, நாம் தூங்கினால் தான் மண்டையில் இருக்கும் நீரை சுண்ணாம்பு முழுமையாக எடுக்கிறது என்றும், அத்துடன் இரவு படுக்கப்போகும் முன்னும் இதே போல் பூசிவிட்டு படுக்கலாம் என்றும், ஒரே நாளில் இரண்டு முறை பயன்படுத்தினாலும் எந்தப்பக்கவிளைவுகளும் இல்லை என்றும் தெரிவித்தனர். சித்த மருத்துவத்தை சோதித்து பார்க்கவிரும்பும் நபர்கள் கூட இந்த மருந்தை பயன்படுத்திப் பார்த்து தங்கள் அனுபவத்தை மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இயற்கையாய் இயற்கையோடு வாழ..!
இயற்கை மருத்துவத்துக்கு மாறுவோம்..!
ஆலமர விழுதுகளாய் நாம் பகிர்வோம்..!
மனிதநேய விதைகளாய் மாறுவோம்..! 

Thursday, July 17, 2014

"மூட்டுவலியும்(Arthritis) முடக்காத்தானும்(Balloon Vine)

நம்மில் பலரும் மூட்டுவலியினால் (ஆர்த்ரைடிஸ்-Arthritis) அவதிப்படுகிறோம். இதற்கான மூலகாரணம் நாம் அறியவேண்டியது ஒன்று நாம் சிறுவயதில் ஓடி ஆடி விளையாடுகிறோம். சிறுவயதில் சிறுநீர் கழிக்க வேண்டுமானால் உடனடியாக செய்துவிடுகிறோம். வயதானால் நல்ல டாய்லட் அல்லது வேறு பல காரணங்களால் அடக்கிக் கொள்கிறோம். சிறுநீரகங்களில் சிறுநீர் நிரம்பி இருந்தாலும், நாம் சரியான இடத்திற்காக, நேரத்திற்காக அடக்கி வைக்கிறோம் இந்த நிலை பெண்களுக்கு 10 வயது முதலும், ஆண்களுக்கு 18 வயது முதலும் ஆரம்பிக்கும். இந்த நேரங்களில் நமது சிறுநீரகங்கள் சிறுநீரை வெளியேற்ற இயலாமல் தவிக்கிறது.
அப்பொழுது மூளையிலிருந்து செல்லும் உத்தரவு மூலமாக தற்காலிகமாக சிறுநீரகம் தன் வேலையை நிறுத்தி வைக்கிறது. இதனால் நம் உடலில் ஓடும் ரத்தம், சிறுநீரை வெளியேற்றாமல் அப்படியே எல்லா இடங்களுக்கும் செல்கிறது. அவ்வாறு செல்லும்போது இரத்தத்தில் உள்ள யூரிக் ஆசிட் கிறிஸ்டல்ஸ் (uric acid crystals) மூட்டுகளில் படிந்து விடுகிறது. இந்தச் சிறு சிறு கற்கள் சுமார் சினோரியல் மெம்கிரேம் (நமது மூட்டுகள் நம் எண்ணத்திற்கு ஏற்ப அசைவதற்கு உதவும் ஒரு தசை) என்னும் இடத்தில் உட்கார்ந்து விடுகிறது. இது பல வருடங்களாக தொடர்ந்து நடைபெறுகிறது.
சிலருக்கு 35 வயதுக்கு மேல் காலை படுக்கையை விட்டு எழும்பொழுது இடுப்பு, பாதம், கை, கால் முட்டிகளில் அதிக வலி இருக்கும். இதுதான் ருமாட்டாயிட் ஆர்த்ரைட்டிஸின்(rheumatoid arthritis) ஆரம்ப நிலை.
இந்தியாவில் 65 சதவிகித மக்கள் இந்த வகை மூட்டு வலியினால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 85 சதவிகிதம் பெண்கள். பலவிதமான மருத்துவ முறைகளில் இந்த நோய்க்கு மூலகாரணம் கண்டுபிடித்து மருந்து அளிப்பதில்லை. நம் முன்னோர்கள் 2000 வருடங்களுக்கு முன்பே இயற்கை மருத்துவ குணம் கொண்ட கீரையை நமக்கு அறிமுகப்படுத்தி உள்ளார்கள். அதுதான் முடக்கத்தான் கீரை.
ஆஸ்திரேலியாவில் உள்ள குயின்ஸ் யுனிவர்சிட்டியிலிருந்து இந்தியாவின் சில மூலிகைகளை காப்பாற்றியும், அதில் உள்ள மருத்துவக் குணங்களையும், எந்த மூலக்கூறு ஒவ்வொரு மூலிகையிலும் எந்தெந்த வியாதிகளுக்கு நிவாரணம் அளிக்கிறது என்பதைப் பற்றியும் கூட்டு முயற்சியில் செயல்பட்டார்கள்.
அப்போது முடக்கத்தானிலுள்ள தாலைட்ஸ் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் யூரிக் ஆசிட்டைக் கரைக்கும் சக்தி படைத்திருப்பதை அறிந்து, மேலும் இந்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு வெற்றியும் கண்டுள்ளார்கள்.
இதன் சிறப்புக் குணம் நமது மூட்டுகளில் எங்கு யூரிக் ஆசிட் இருந்தாலும் அதைக் கரைத்து. சிறு நீரகத்திற்கு எடுத்துச்சென்று விடும். இதுபோல் எடுத்துச்சென்று சிறுநீராக வெளியேற்றும்போது, அது சோடியம் மற்றும் பொட்டாசியம் இவைகளை நம் உடலிலே விட்டு விடுகிறது. இது ஒரு மிக முக்கியமான இணையான மாற்றத்தை நம் உடலில் ஏற்படுத்துகிறது. இதனால் நமக்கு உடல் சோர்வு ஏற்படுவதில்லை. மூட்டுகளுக்கு கனிப்பொருள் சக்தியும் அளிக்கிறது.
முடக்கத்தான் கீரையை தோசை மாவில் கரைத்து, தோசை செய்து சாப்பிட வேண்டும். அந்தக் கீரையைக் கொதிக்க வைத்து உண்ணக் கூடாது. அதனுள் உள்ள மருத்துவ சத்துக்கள், கொதிக்க வைப்பதின் மூலம் அழிந்து விடும்.
மழைக்காலங்களில் மட்டுமே இந்தக் கீரை கிடைக்கும். முடக்கத்தான் கீரை, மருத்துவ குணங்கள் நிறைந்த, ஒரு அரிய‌ கீரையாகும். தமிழ்நாட்டு கிராமங்களில், எல்லோர் வீட்டுக் கொல்லைப் புறத்திலும் இது படர்ந்து கிடக்கும்.

Wednesday, July 16, 2014

தூதுவளைப்பொடி :

தூதுவளையின் மருத்துவ குணங்கள் மிகவும் சக்தி வாய்ந்தது. இது சயரோகம், பிரைமரி காம்ளக்ஸ், ஆஸ்துமா, டான்சிலிட் டீஸ், தைராய்டு கட்டிகள், வாயில், கன்னத்தில் ஏற்படும் கட்டிகளுக்கும் காதில் ஏற்படும் எழுச்சிக் கட்டிக்கும் பயன்படுகிறது. சளியைக் கரைக்கும் தன்மைக்கு முதலிடம் பெறுகிறது. தைராய்டு கட்டிகள் தோன்றியவுடன் தூதுவளையைப் பயன்படுத்தினால் நிரந்தரத் தீர்வு காணலாம்.
தூதுவளை இலையை சேகரித்து சுத்தம் செய்து, பதினைந்து முதல் ஐம்பது கிராம் வரை எடுத்து, ஊற வைத்த அரிசி சேர்த்து அரைத்து ரொட்டியாகத் தயாரித்து காலை உணவாக மூன்று ரொட்டிக்குக் குறையாமல் இரண்டு மாதங்கள் சாப்பிட்டால், பூரண குணம் ஏற்படும். முதல் பதினைந்து தினங்கள் முதல் தொண்டைவலி குறைய ஆரம்பிக்கும். பிறகு படிப்படியாக நோய் நிவாரணம் அடையும்.
தூதுவளை இலை 15 கிராம் அளவில் சேகரித்து 500 மில்லி தண்ணீரில் போட்டு 200 மில்லியாக சுண்டக் காய்ச்சி வடிகட்டி 30 முதல் 40 மில்லி வரை ஒரு நாளைக்கு மூன்று வேளை இந்த கஷாயத்தைச் சாப்பிட்டு வந்தால், இருமல், இரைப்பு, சளியுடன் கூடிய காய்ச்சல், சயரோகக் காய்ச்சல் குணமாகும்.
இருபது கிராம் தூதுவளை இலையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, சட்னியாகவோ, பச்சடியாகவோ தயாரித்து பயன்படுத்தினால், மேற்கண்ட நோய்கள் குணமாகும். இப்படி தயாரித்த துவையலை சாப்பிடும்போது காலை, மதியம், இரவு நேர உணவுடன் சேர்த்துச் சாப்பிட்டால் நல்ல பலனை உடனே காண முடியும். இவ்வாறு வாரத்தில் இரண்டு தினங்களாவது சாப்பிட்டு வந்தால் நோய்த் தடுப்பாகவும், நோய் தீர்க்கவும் பயன்படும். இம்முறையில் பயன்படுத்தினால் நுரையீரல் நோய்கள் வராமல் நுரையீரல் பாதுகாக்கப்படும். ஆஸ்துமா, ஈசனோபீலியா நோய் வராமல் தடுப்பு மருந்தாகவும், வந்தபின் நோய் நீக்கவும் பயன்படுகிறது. தூதுவளையைப் பயன்படுத்துவதால் மூளை நரம்புகள் வலிமையடைகின்றன. இதனால் நினைவாற்றல் பெருக உதவியாக இருக்கிறது.
தூதுவிளங்காயைச் சேகரித்து மோரில் ஊற வைத்து வற்றலாகக் காயவைத்து வைத்துக் கொண்டு பனி மற்றும் மழைக்காலங்களில், எண்ணெயில் பொரித்து ஆகாரத்தில் சேர்த்துக் கொண்டால் ஆஸ்துமா நோய் தணியும். நுரையீரல் வலுவடையும்.
தூதுவளை இலையைப் பொடி செய்து வைத்துக் கொண்டு பயன்படுத்தலாம். இப்பொடியை உபயோகிப்பதால் சளி, இருமல் நீங்குகிறது. பசியை உண்டாக்குகிறது. ஆஸ்துமா நோயாளிகள் தொடர்ந்து பயன்படுத்திக் கொள்ளலாம். இப்பொடியை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், நீரிழிவு கட்டுப்படும். இப்பொடியுடன் திப்பிலிப் பொடியை சமமாக சேர்த்து தேனில் குழைத்துச் சாப்பிட்டால், இருமல் உடனே நின்று விடும்.
பசும்பாலில் இப்பொடியைச் சேர்த்து சாப்பிட்டால் பித்த நோயால் ஏற்படும் மயக்கம் தீரும். இப்பொடியை எருமை மோரில் கலந்து சாப்பிட்டால் இரத்த சோகை நீங்கி இரத்த விருத்தி உண்டாகும்.
தண்ணீரில் கலந்து சாப்பிட்டால் செய்யான் கடி விஷம் தீரும்.
தூதுவளை இலையை நெய்யில் வதக்கி, துவையல் செய்து வாரத்தில் இரண்டு நாளாவது பயன்படுத்தினால் வாயுவைக் கண்டிக்கும். உடல் வலிமை ஏற்படும். மூலரோகப் பிணிகள் குறையும். தாம்பத்ய உறவு மேம்படும்.
ஆஸ்துமா நோயாளிகள், காலை வேளையில் வெறும் வயிற்றில் தூதுவளைச்சாறு 50 மில்லியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமாவினால் ஏற்படும் சளி, இருமல் கபத்தைப் போக்கும்.
தூதுவளை இலைச்சாறு 100 மில்லி, பசு நெய் 30 மில்லி, இரண்டையும் சேர்த்து தூள் செய்த கோஸ்டம் 5 கிராம் சேர்த்து பதமாய்க் காய்ச்சி வைத்துக் கொண்டு, இதில் ஒரு தேக்கரண்டியளவு, தினம் இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால் சாதாரண இருமல் முதல் கக்குவான் இருமல் வரை குணமாகும். குழந்தைகளுக்கும் கொடுக்கலாம், பத்தியமில்லை.
தூதுவளையை அடிக்கடி பயன்படுத்தினால் புற்று நோய் வராமல் தடுக்கலாம். தொண்டைப் புற்று, கருப்பை புற்று, வாய்ப்புற்று ஆகிய வற்றிற்கு தூதுவளை மருந்து மிக்க நல்ல பலன் கொடுத்துள்ளது. ஆய்வு மூலம் தொண்டைப்புற்று, வாய்ப்புற்றுக்கு நல்ல மருந்தென நிரூபிக்கப்பட்டுள்ளது.
புகைப்பழக்கம், மதுப்பழக்கம் போன்ற பின் விளைவுகளான புற்றுநோய் எனக் கண்டறியப்பட்டால் ஆரம்ப நிலையிலே தூதுவளை இலையைப் பயன்படுத்தி, பூரண சுகாதாரத்தைச் சில மாதங்களிலே மீண்டும் பெற்று விடலாம்.
சித்த வைத்திய முறையில் தயாரிக்கப்படும் தூதுவளை நெய் பல நோய்களுக்கு நிவாரணமளிக்கிறது. தூதுவளை நெய்யை 1 முதல் இரண்டு தேக்கரண்டியளவு சாப்பிட்டால், எலும்புருக்கி நோய்கள், ஈளை இருமல், கபநோய்கள், மேக நோய்கள், வெப்பு நோய்கள், இரைப்பு, இளைப்பு இருமல் நோய்கள், வாய்வு, குண்டல வாயு முதலியன தீரும்.
தூதுவளையை மிக எளிய முறை உபயோகத்திலேயே பல நன்மைகளை அடைய முடியும்.
இதே போல தூது விளங்காயையும் சமைத்துச் சாப்பிட்டால், கப ரோகம் தீரும். பித்தவாயு இவைகள் நிவர்த்தியாகும்.

சித்தர்கள் சொன்ன மருத்துவக் குறிப்புக்கள்..!

மூலிகை மருந்துகள்
1. சோற்றுக் கற்றாழையைச் சித்த மருத்துவத்தில்
‘குமரி’ என அழைப்பர். காய கல்பத்தில்
அதுவும் ஒரு மூலிகையாகச் சேர்க்கப்படுகின
்றது. அதன் நடுப்பகுதியைப் பிளந்து அதன்
கசப்பான சாற்றை எடுத
்துச் சற்றே அலசிப் பின் மோரில்
கலந்து தினம்தோறும் உண்டு வந்தால், அல்சர்
போன்ற நோய்கள் குணமாகும். மேலும் உடலில்
இளமைத் தன்மை அதிகரிக்கும்.
2. தினம் தோறும் ஒரு நெல்லிக்காய்
சாப்பிட்டு வந்தால் நாள் பட்ட தோல் நோய்கள்
குணமாகும். நோய் எதிர்ப்பு சக்தி உடலில்
அதிகரிப்பதுடன், முகப்பொலிவும்
உண்டாகும்.
3. சர்க்கரை நோய் கட்டுப்பட வெந்த்தயத்தைப்
பொடி செய்து தினம்தோறும் ஒரு டீஸ்பூன்
வெந்நீரில் கலந்து சாப்பிட்டு வர வேண்டும்.
மேலும் சிறியாநங்கை, பெரியாநங்கையின்
சாற்றையும் பயன் படுத்தலாம்.
4. செம்பருத்திபூவைக்
காயவைத்து பொடி செய்து தலையில்
சீயக்காய்போலத் தேய்த்துக் குளித்து வந்தால்,
பொடுகுத் தொல்லை போகும்.
நன்கு தலை முடி வளரும். முடி கொட்டுவதும்
நின்றுவிடும். மேலும் கண்களுக்கும்
உடலுக்கும் குளிர்ச்சி தரும்.
5. தேனை தினமும் வெந்நீரிலோ,
பாலிலோ சிறிதளவு கலந்து குடித்து வர
உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உண்டாகும். நாள்
பட்ட இருமல், சளி குணமாகும்.
6. மூச்சுக்கூட விடமுடியாமல்
அதிகப்படியான இருமலாலும் சளியாலும்
சிரமப்படும் குழந்தைகளுக்கு,
குப்பை மேனியின் சாற்றைப்
பிழிந்து சிறிதளவு கொடுத்தால் உடன்
அனைத்துச் சளியும் வாந்தியாக வெளியில்
வந்து விடும். ஆனால் சரியான அளவில்
கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் வயிற்றுப்
போக்கு ஏற்படும்.
7. ஆண்மைக்குறைவைப் போக்க
விரும்புபவர்கள் முருங்கை விதையைப்
பொடி செய்து, பாலில் கலந்து, இரவில்
படுக்கப் போகும் முன் சாப்பிட்டுவர
விரைவில் பலன் கிடைக்கும். துரித ஸ்கலிதம்
ஆகுபவர்களுக்கு இம்மருந்து கை கண்டதாகும்.
8. இரவில் தினந்தோறும் தூக்கம் வராமல்
அவதிப்படுபவர்கள்
சிறிதளவு வெந்நீரை அருந்திப் பின்
படுக்கைக்குச் செல்ல வேண்டும். சர்க்கரை நோய்
இல்லாதவர்கள்
சிறிதளவு கருப்பட்டி அல்லது வெல்லம்,
அல்லது சர்க்கரையைச் சாப்பிட்ட பின் உறங்கச்
செல்லலாம்.
9. அருகம்புல்லைச்
சாறாகவோ அல்லது பொடியாகவோ வாரம்
ஒருமுறை சேர்த்துக் கொண்டால் இரத்தம்
சுத்தமாவதுடன், உடல் உஷ்ணமும் தணியும்.
10. எந்த மருந்துகளை உட் கொள்பவராக
இருந்தாலும் மது அருந்தும் பழக்கம்
உடையவராகவோ அல்லது புகைப்பிடிப்பவர
ாகவோ இருந்தால் அது உடலில் மருந்தின்
செயல்பாட்டு வீரியத்தைக் குறைக்கும்.
11. உடல் வெளுப்பு மற்றும் தேமல் குணமாக
வெள்ளை பூண்டை வெற்றிலை சேர்த்து மசிய
அரைத்து தினமும் தோலில் தேய்த்துக்
குளித்து வரக் குணமாகும்.
12. குருதிக் கொதிப்பு எனப்படும் இரத்த
கொதிப்பு நோய் குணமாக
இரண்டு அல்லது மூன்று நாளைக்கு ஒருமுறை அகத்திக்
கீரையை உணவில் சேர்க்க குணம் ஏற்படும்.

Wednesday, July 9, 2014

அதிமதுரம்

அதிமதுரம்
கல்லடைப்பு நீங்க...
ஊட்டச் சத்தாகவும் இரத்தப் போக்கை நிறுத்துவதிலும், சொட்டு மூத்திரத்தை நிவர்த்திக்கவும், சிறுநீர்ப்பை புண்களை ஆற்றவும். கல்லடைப்பை நீக்கவும் பயன்படுகிறது.
இருமல் நீங்க...
அதிமதுரம், கடுக்காய், மிளகு மூன்றையும் சம எடையில் எடுத்து இளவறுப்பாய் வறுத்து, சூரணம் செய்து வைத்துக் கொண்டு 5 கிராம் அளவில் தேனில் குழைத்துச் சாப்பிட்டால், அதிகச் சூட்டினால் ஏற்படும் இருமல் தீரும்.
பிரசவத்திற்கு முன் வரும் உதிரப் போக்கைத் தடுக்க...
அதிமதுரம், சீரகம் சரி எடை எடுத்து பொடித்து வைத்துக் கொண்டு 20 கிராம் பொடியை 200 மில்லி தண்­ரில் போட்டுக் கொதிக்க வைத்து 100 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி காலை வேளையில் மூன்று தினங்கள் சாப்பிட்டால் கருவுற்ற பெண்களுக்கு பிரசவத்திற்கு முன்னதாக உள்ள காலங்களில் ஏற்படும் உதிரப் போக்கை நிவர்த்தி செய்து விடலாம்.
மஞ்சள் காமாலை நீங்க...
அதிமதுரம், சங்கம் வேர்ப்பட்டை சமமாக எடுத்துப் பொடி செய்து எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேற்றாங்கொட்டை அளவு மாத்திரை செய்து உலர்த்தி வைத்துக் கொண்டு, பசும்பாலில் மூன்று தினங்கள் சாப்பிட்டால், மஞ்சள் காமாலை நிவர்த்தியாகும். புளியில்லா பத்தியம் இருக்க வேண்டும்.
சுகப் பிரசவத்திற்கு...
அதிமதுரம், தேவதாரம் இவைகள் வகைக்கு 35 கிராம் பொடி செய்து, பிறகு வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து, பிரசவ வலி துவங்கிய உடன் இரண்டு முறை கொடுத்தால் சுகப்பிரசவம் ஏற்படும்.
தொண்டைக் கட்டு இருமல் சளிக்கு...
அதிமதுரச் சூரணத்தைத் தயாரித்து வைத்துக் கொண்டு 2 கிராம் அளவில் தேனில் குழைத்து, தினம் மூன்று வேளை சாப்பிட்டால் தொண்டைக் கட்டு, இருமல், சளி குணமாகும். இதைச் சாப்பிட்டு வருபவர்களுக்கு ஆண் தன்மை பலவீனம் நீங்கும். உடல் பலமும், ஆரோக்கியமும் விருத்தியாகும்.
பெண் மலடு நீங்க...
பெண்களுக்கு ஏற்படும் கருப்பைத் தொடர்பான நோய்கள் நிவர்த்தியாகும். ஆரோக்கியமான பெண்களின் மலட்டுத்தன்மை நீங்கும்.
மலச்சிக்கல் நீங்க...
அதிமதுரம், ரோஜா மொக்கு, சோம்பு இவற்றைச் சம அளவில் எடுத்து இடித்துச் சலித்து வைத்துக்கொண்டு, இரவு படுக்கும் போது 6 கிராம் பாலில் கலந்து சாப்பிட்டால் மலச்சிக்கல் இருக்காது. இலகுவாக மல விருத்தியாகும்.
சூடு தணிந்து சுறுசுறுப்பாக...
சோம்புச்சூரணம், அதிமதுரச் சூரணம் தலா 5 கிராம் அளவில் இரவு படுக்கும்போது சாப்பிட்டு சுடு தண்­ர் சாப்பிட்டால், இலகுவாக மல விருத்தியாகும். உள் உறுப்புக்கள் சூடுதணிந்து, சுறுசுறுப்பாக உடல் இயங்கச் செய்யும்.
ரத்த வாந்தி நிற்க...
அதிமதுரச் சூரணம் கலப்படம் இல்லாத சந்தனச் சூரணம் வகைக்கு அரை கிராம் எடுத்து பாலில் கலந்து 4 வேளை சாப்பிட்டால், வாந்தியுடன் இரத்தம் வருதல் நிற்கும்... உடலில் உள் உறுப்பு ரணங்கள் ஆறிவிடும்.
தாய்ப்பால் பெருக....
போதுமான அளவு தாய்ப்பால் இல்லாதவர்கள் ஒரு கிராம் அதிமதுரச் சூரணத்தைப் பாலில் கலந்து சிறிதளவு இனிப்பு சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாய்ப்பால் அதிகமாகச் சுரக்கும். இதன் மூலம் குழந்தைகளுக்குக் கூடுதலாக ஊட்டச்சத்து கிடைக்கும்.
வரட்டு இருமல் நீங்க...
அதிமதுரம், வாதுமைப் பிசின், வேலம் பிசின் சமமாக வகைக்கு 10 கிராம் அளவில் சேகரித்து வைத்துக் கொண்டு, 250 கிராம் சர்க்கரையைத் தண்­ர் சிறிதளவு விட்டு பாகு பதம் வரும்வரை காய்ச்ச வேண்டும். தேன் பதம் வரும்போது மேற்கண்ட சூரணங்களைக் கொட்டிக் கிண்டி லேகியம் தயாரித்து வைத்துக் கொண்டு, இரண்டு தேக்கரண்டியளவு மூன்று முறை சாப்பிட்டால், வரட்டு இருமல் தீரும். கோழையுடன் உள்ள இருமலும் தீரும். தொண்டைப் புண் ரணங்கள் விரைவில் ஆறிவிடும்.
இளநரை நீக்க...
அதிமதுரத்தை நன்றாக அரைத்துப் பசும்பாலில் கலந்து தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளநரை ஏற்படாமல் தடுக்கும். தலை மயிர் உதிர்தல் இருக்காது.
நெஞ்சுச் சளி நீங்க....
அதிமதுரம், அரிசித்திப்பிலி, சித்தரத்தை மூன்றையும் தலா பத்து கிராம் அளவில் சேகரித்து வைத்துக்கொண்டு, இதில் முசுமுசுக்கை இலை பத்து கிராம். ஆடா தொடை இலை பத்து கிராம், இவைகளை 200 மில்லி தண்­ரில் விட்டுக் காய்ச்சி 50 மில்லியாகச் சுண்டியதும் வடிகட்டி, காலை, இரவு இரண்டு வேளை சாப்பிட்டு வந்தால், நெஞ்சுச் சளியும் அனைத்து வகைச் சளிகளும் வெளியாகும். இருமல் நின்று விடும். ஆஸ்துமா நோயாளிகளுக்குச் சிறந்த நிவாரணமாகும். இம்முறையில் தயாரிக்கப்பட்ட மருந்தை சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பருக, சளித்தொல்லை நீங்கும்.
இருமல் நீங்க...
அதிமதுரம், வால்மிளகு, சித்தரத்தை, திப்பிலி ஆகியவை வகைக்கு 5 கிராம் எடுத்து சன்னமாகப் பொடித்து 250 மில்லி கொதிக்கும் நீரில் போட்டு மூடி 30 நிமிஷங்கள் சென்றபின் வடிகட்டி காலை, மாலை இருவேளை 30 மில்லி வீதம் சாப்பிட்டால் இருமல் தீரும்..
மஞ்சள்காமாலை தீர...
அதிமதுரம் 15 கிராம், சீரகம் 15 கிராம், வெங்காயம் 20 கிராம், சங்கம் வேர்ப்பட்டை 15 கிராம் இவைகளை பசும்பால் தெளித்து நன்றாக அரைத்து காலை வேளையில் மூன்று தினங்கள் மட்டும் சாப்பிட்டால் மஞ்சள் காமாலை தீரும். மூன்று தினங்களுக்கும் ஆகாரத்தில் உப்பு, புளி சேர்க்காமல் பத்தியம் இருக்க வேண்டும்.
தாது விருத்திக்கு...
அதிமதுரத்தை நன்கு பொடித்து பாலில் கலக்கி சிறிதளவு தேன் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால், தாது விருத்தி உண்டாகும். போக சக்தி அதிகரிக்கும். போக சக்தியை இழந்த வாலிபர்களுக்குப் புத்துயிர் அளிக்கும் சிறந்த மூலிகையாகும்.
கருத்தரிக்க உதவும்...
அதிமதுரம், திராட்சை இவை இரண்டையும் சமமாகப் பொடி செய்து 100 கிராம் எடுத்து தண்­ரில் அரைத்து பாலில் கலக்கி பெண்களின் மாதவிடாய் தொடங்கிய நாள் முதல் ஐந்து தினங்கள் சாப்பிட்டு வந்தால், ஆரோக்கியமான பெண்களுக்குக் கருத்தரிக்கும். கருத்தரிக்கும் வரை 3 மாதங்கள் சாப்பிட்டால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.
வழுக்கை நீங்கி முடி வளர ....
அதிமதுரத்தை நன்றாகப் பொடி செய்து, அம்மியில் வைத்து எருமைப்பால் விட்டு நன்றாக விழுதாகும் வரை அரைத்து, தேவையான அளவு எருமைப்பாலில் கலக்கித் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், இளவயதில் ஏற்பட்ட தலை வழுக்கை நீங்கி மீண்டும் மயிர் முளைக்கும். தலையில் உள்ள பொட்டு, பொடுகு, சுண்டு முதலியவை நீங்க, இதைப் பயன்படுத்துவதால் மேற்கண்ட குறைகள் நிவர்த்தியாகும்.
தலைவலிகள் நீக்க...
அதிமதுரம், சோம்பு, சர்க்கரை இவைகளை வகைக்கு 35 கிராம் எடுத்து, தனித்தனியாக நன்கு சூரணம் செய்து, பின் ஒன்று கூட்டி வைத்துக் கொண்டு தேனில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால், உடல் சூட்டினால் ஏற்பட்ட தலைவலி நீங்கும். இதையே தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் தொடர்ந்து தொல்லை கொடுக்கும் தலைவலி, தீராத தலைவலி, ஒற்றைத் தலைவலி தீரும். அதிமதுரம், கடுக்காய், தான்றிக்காய், நெல்லிக்காய் இவைகளை சம எடையாக எடுத்துச் சூரணம் செய்து அரைத் தேக்கரண்டியளவு தேனில் குழைத்துச் சாப்பிட்டால் சீதளத்தால் ஏற்பட்ட தலைவலி தீரும். இதே சூரணத்தை நெய்யில் குழைத்துச் சாப்பிட்டு வந்தால் அதிக வெப்பத்தால் ஏற்பட்ட தலைவலி நீங்கும்.
தொண்டை கரகரப்பு நீங்க...
அதிமதுரத் துண்டு ஒன்றை வாயில் அடக்கிக் கொண்டிருந்தால் வாயில் உமிழ் நீர் சுரக்கும். இந்த உமிழ்நீரை உள்ளுக்கு விழுங்கிக் கொண்டிருந்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும். குரல் கம்மல் நீங்கி விடும்... தொண்டையில் உள்ள சளிக் கட்டு கரைந்து விடும்.
ஆஸ்துமாவைக் கட்டுப்படுத்த...
பொதுப்பிரயோகமாக அதிமதுரச் சூரணத்தை தினசரி ஒரு தேக்கரண்டியளவு சாப்பிட்டு வந்தால், ஆஸ்துமா நோயைக் கட்டுப்படுத்தலாம். சளி, இருமல் இருக்காது. தொண்டை சம்பந்தப்பட்ட தொல்லைகளும் நீங்கிவிடும்

பொரிவிளங்கா.

நல்ல ரெத்தம் ஊற, நல்லா செறிமானமாக, பொம்பளைகளுக்கு வீட்டுக்குத் துரமா போறது முன்னப்பின்ன இல்லாம சீரா இருக்க, ஒரே மருந்தாத் தாரேன்னு ஆராவது சொன்னா நம்பாதீக பேரப்புள்ளைகளா… அது மருந்து இல்ல,
தீம்பண்டம். தெனமும் புள்ளைகளுக்கு அம்பது நூறுனு கேக்கு, சிப்சுன்னு வாங்கிக் குடுக்குறதுக்கு பதிலா, வீட்டுலயே இதச் செஞ்சு குடுங்க. தீம்பண்டத்துக்குத் தீம்பண்டமாச்சு, பிள்ளைகளுக்கு ஒடம்பும் நல்லா கின்னுனும் வளத்தாப்ல ஆச்சு. அதுக்குப் பேருதேன்
பொரிவிளங்கா.
ஒடனே பேத்திக வந்து எப்ப்டி செய்யிறதுனு தெரியாதுல கெழவினு வெரட்டுறதுக்குள்ள நானே சொல்லிப்புடுறேன்.
பாசிப்பயறு, அரிசி ரெண்டையுஞ் சேத்து வறுத்து, அதோட கொஞ்சம் சுக்கும், ஏலக்காயும் போட்டு நல்லா இடிச்சு…. ம்ம்கும்… பேத்திக இடிச்சா விடிஞ்சுரும், சரித்தா… அரைச்சு… ( பேத்திகளுக்குச் சிரிப்பப் பாரு ) எடுத்துட்டு வந்து, அதுல பொரிகடல கொஞ்சம் அரைக்காம சேத்து, அதுல வெல்லப் பாகு ஊத்தி பெசஞ்சு பெசஞ்சு உருண்டை உருண்டையா உருட்டி வைங்க தாயிகளா. செத்த நேரத்துல நல்லா கட்டியா இறுகிரும். சாயந்தரம் பிள்ளைக பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் ஒரு உருண்ட குடுத்துப் பாருங்க. பிள்ளைக எம்புட்டு திடமா வளருதுன்னு ஒரு ஆறு மாசங் கழிச்சு கெழவிட்ட வந்து சொல்லுங்க தாயி.
இந்த வேலைக்குப் போற பேத்திக கூட ஒத்த உருண்டைய கைப்பயிக்குள்ள போட்டுட்டுப் போயி சாயந்தரம் ஒன்னச் சாப்புடுங்க வீட்டுக்கு வந்ததும் அலுப்பே தெரியாது.
ஒங்க எல்லாரையும் கும்புட்டுக் கேட்டுக்கிறேன். இந்த ஆர்லிக்சு பூச்டு வாங்கி, ரெத்தஞ்சிந்தி ஒழச்ச துட்ட வீணாக்காதீங்க.
வயிற்றுப்புண்,
மலச்சிக்கல் போக்கும் திராட்சை!
திராட்சைப்பழம் எல்லோருக்கும் தெரிஞ்ச ஒண்ணுதான். ஆனா அதுக்குள்ள மருத்துவக்குணம் சிலபேருக்கு தெரிஞ்சிருக்கும், சில பேருக்கு தெரியுறதுக்கு வாய்ப்பில்லை. தெரிஞ்சாலும், தெரியலைன்னாலும் ஏதோ பழம் சாப்பிடணும்னு சாப்பிடுவோம், அவ்வளவுதான்.
அல்சர், அல்சர்னு அவதிப்படுறவங்களுக்கு இந்த திராட்சை அற்புதமான மருந்து. காலையில எழுந்திரிச்சதும் வெறும் திராட்சை ஜூஸ் (வீட்டுல தயாரிச்சது) குடிச்சி பாருங்க... அல்சருக்கே அல்சர் வந்துரும். அதேமாதிரி தலைசுற்றல், மலச்சிக்கல், கை - கால் எரிச்சல் உள்ளவங்க திராட்சையை சாப்பிட்டு வந்தா கைமேல் பலன் கிடைக்கும். நிறைய நோய்களுக்கு மலச்சிக்கல்தான் காரணமாயிருக்கு.
மலச்சிக்கல் போகணும்னா அப்பப்போ காய்ஞ்ச திராட்சை சாப்பிடுங்க. இதே பிரச்சினை குழந்தைகளுக்கு இருந்தா கொஞ்சம் தண்ணியில காய்ஞ்ச திராட்சையை ராத்திரி ஊறப்போட்டுட்டு காலைல எழுந்திரிச்சதும் அதை நசுக்கி அந்த சாறை குடுங்க, பிரச்சினை சரியாயிரும். இது எத்தனை வயசு குழந்தைக்கும் கொடுக்கலாம். குழந்தை உண்டானவங்களுக்கு வாய்க்குமட்டல், வாந்தி, வாய்க்கசப்பு இருக்கும். அப்போ திராட்சை சாப்பிட்டா பலன் கிடைக்கும்.
எடை குறைவா இருக்குறவங்க, உடம்புல சூடு அதிகம் உள்ளவங்களும் கண்ணை மூடிக்கிட்டு திராட்சையை சாப்பிடுங்க. இந்த திராட்சை புற்றுநோயைக்கூட சரிப்படுத்தும்னு ஆராய்ச்சியில நிரூபிச்சிருக்காங்க. எல்லாம் நம்ம கையிலதான் இருக்கு. முக்கியமா விதை உள்ள கருப்பு திராட்சை எல்லா திராட்சைகளையும்விட விஷேசமானது

கோரைக்கிழங்கு.

1. மூலிகையின் பெயர் -: கோரைக்கிழங்கு.
2. தாவரப் பெயர் -: CYPERUS ROTUNDUS.
3. தாவரக் குடும்பப் பெயர் -: CYPERACEAE.
4.பயன்தரும் பாகங்கள் -: கிழங்கு.
5. வேறு பெயர்கள் -: முத்தக்காசு, எருவை, கோரா, கோரைக்கிழங்கு மற்றும் ஆங்கிலத்தில் Coco-grass,
nut sedge, nut grass, purple nut sedge, red nut
sedge முதலியன. இதில் சிறு கோரை, பெருங்கோரை
என இரு வகையுண்டு.
6. வளரியல்பு -: கோரை ஒரு புல் இனத்தைச் சேர்ந்தது.
இதன் தாயகம் ஆப்பிரிக்கா, தென் ஆசியா, தென் மற்றும் மத்திய ஐரோப்பா, பிரான்ஸ், சைனா மற்றும் இந்தியாவுக்குப் பரவிற்று. தரைமட்டத்திலிருந்தே தோன்றியுள்ள தட்டையான நீண்ட இலைகளையுடையது. முட்டை வடிவ சிறு கிழங்குகளைப் பெற்றிருக்கும். வளர்ந்த பின் உச்சியில் மூன்று பிறிவாக சிறு பூக்கள் கொண்டிருக்கும். இக்கிழங்குகளே மருத்துவப் பயனுடையது. பெரும் கோரைக்குக் கிழங்குள் கிடையாது வேர் மட்டும். மணற்பாங்கான இடம், வயல் மற்றும் வளமான நிலம் மற்றும் பயிர்களுக்கு இடையே களையாகவும் வளர்ந்திருக்கும். பன்றிகள் இதன் கிழங்கை விரும்பித் தின்னும். கிழங்குகள் வெளிப்பாகம் கறுப்பாக இருக்கும். உட்புறம் வெள்ளையாக இருக்கும். இது கசப்புத் தன்மையுடையது. ஆனால் நறுமணமாக இருக்கும். பெருங்கோரையை வயல்களில் வளர்த்திப் பெரிதாக வளர்ந்த பின் அதை பாயாகப் பின்னுவார்கள். கோரையின் சல்லி வேர்கள் பக்கவாட்டில் பரவி அதிகமாக உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும், விதை மூலமும் உற்பத்தியாகும்.
7. மருத்துவப்பயன்கள் -: கோரைக்கிழங்கு சிறுநீர், வியர்வை ஆகியவற்றைப் பெருக்குதல், உடல் பருமனைக் குறைத்து தாது வெப்பு அகற்றி பலமுண்டாக்குதல், இதயம், மூளை, வயித்துக்கு சக்தி, மாதவிடாய் தொல்லை, காச்சல், வாயுத்தொல்லை குணமடையச் செய்தல், கர்பப்பை கோளாறு குணப்படுத்தல், மார்பு வளர்ச்சி மற்றும் தாய் பால் சுத்தம் செய்தல் ஆகியவை செய்யும்.
கிழங்கு சூரணம் 1 கிராம் காலை, மாலை தேனில் கொள்ள புத்திக்கூர்மை, தாதுவிருத்தி, பசித்தீவனம், உடற்பொலிவு உண்டாகும்.
கோரைக்கிழங்கு, சந்தனம், வெட்டிவேர், பற்படாகம், பிரமட்டை, சுக்கு வகைக்கு 5 கிராம் சிதைத்து 500 மி.லி. நீரில் போட்டு 125 மி.லி.யாகக் காய்ச்சிக் காலை, மாலை கொடுத்து வரத் தாகத்துடன் கூடிய சுரம் நீங்கும்.
கிழங்கை குடிநீர் செய்து காச்சிய பாலில் சேர்த்து மோராக்கி அதில் உணவு கொள்ளக் குழந்தைகளுக்குக் காணும் பசியின்மை செரியாமை தீரும்.
இஞ்சியும் கோரைக் கிழங்கையும் நன்கு தேன் விட்டு அரைத்து ஒரு சுண்டக்காயளவு கொடுத்தால் சீதபேதி குணமாகும்.
பச்சைக்கிழங்கை அரைத்து மார்பின் மீது பற்றுப்போட்டால் பச்ச உடம்புக்காரிக்குப் பால் சுரக்கும். தேள் கடி, குளவிக் கடி ஆகியவைகளுக்குப் பற்றிட்டால் குணமாகும். இதை உடல் மீது பூசினால் வியர்வை நாற்றம் வராது.
கோரைக் கிழங்கைப் பாலுடன் அரைத்துப் பசையாக்கி தலைக்குப் பூசினால் ஞாபகசக்தி கூடும். வலிப்பு நோய், காய்ச்சல், பைத்தியம் குணமடையும். மேலும் இரத்தக்கோளாறுகள், நுரையீரல் கோளாறுகள், சிறுநீர் தாரை சுத்தம் ஆகியவை குணமாகின்றது. கர்ப்பப் பையையும், மார்பகங்களையும் நன்கு வளர்ச்சியடையச் செய்கிறது. இதை 1-3 கிராம் பவுடராகவும், 10-70 மில்லிவரை கசாயமாகவும் குடிக்கலாம். குழந்தைகளுக்கும், பச்சை உடம்புக் காரிகளுக்கும் குடிக்கக்கொடுக்கக்கூடாது. சித்த மருத்துவரின் ஆலோசனைப் படி கொடுக்க வேண்டும்.
கோரைக்கிழங்குப் பவுடரை அரை தேக்கரண்டி வீதம் காலையும் இரவும் உணவுக்கு முன் நீர் அல்லது பால் அல்லது தேனில் கலந்து சாப்பிட்டால் இரத்தக் கொதிப்பு, வயிற்றுப்போக்கு நீங்கும்.

நெருஞ்சியின் அளப்பரிய பயன்கள்:-

நெருஞ்சில் ஒரு அற்புதமான மூலிகை ஆகும் . தரையில் படர்ந்து காலைக்குத்திக் குத்தி நம் கவனத்தை ஈர்க்கும் இந்த சிறு கொடிகள் சிறுநீர் தாரை நோய்கள் அத்தனையும் நீக்கும் குணம் வாய்ந்தது. மேலும் இது ஒரு ஆகர்ஷண மூலிகையாகும்.
இது சிறு நெருஞ்சில், செப்பு நெருஞ்சில் பெருநெருஞ்சில் (யானை நெருஞ்சில்) என 3 வகைப்படும்.
கொடியின் இலை, வேர்,காய், பூ, தண்டு, மற்றும் முள் என அனைத்தும்.பயன்தரும் . நெருஞ்சில் மணற்பாங்கான இடங்களில் தரையில் படர்ந்து காணப்படும். இது ஒரு முட்செடி., சிறு சிறு முற்கள் உண்டு. .இந்தியாவில் எங்கும் பரவலாகக் காணப்படுகிறது.
தமிழகமெங்கும் சாலையோரங்களிலும், தரிசு நிலங்களிலும் காணலாம். மஞ்சள் நிற மலர்களையுடையது. மலர்கள் சூரிய திசையோடு திரும்பும் தன்மையுடையன. இதன் காய் முற்றிக் காய்வதால் முள்ளுடன் இருக்கும்.
இதன் பெரு நெருஞ்சிலை யானைவணங்கி என்பர்.பெரு நெருஞ்சில் சிறு செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் இலைகள் அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும்.
இதன் இலையை ஒரு குவளை தண்ணீரில் சிறிது நேரம் இட்டால் ,தண்ணீர் அடர்த்தி மிகுந்து கெட்டியாகிவிடும் .பார்ப்பதற்கு அதிசியமாக இருக்கும் .எண்ணெய் போல் பிசுபிசுப்பு ஆகிவிடும் .இதுவும் ஒரு மருந்து ,இது காமவர்த்தினி .ஆண்மை பெருக்கி . .மேலும் இது பட்டுத்துணிகளை சுத்தப்படுத்தும்.
யானை நெருஞ்சலைப் பிடுங்கி நீரில் ஒரு மணி நேரம் ஊறவிடவும். இந்த நீரில் பட்டு, நூல் துணிகளை ஊற வைத்து எடுக்க அழுக்கு, கறை அகலும்.
இது எந்த ரசாயனமும் இல்லாமல் இயற்கை முறையில் பட்டு முதலிய துணிவகைகளை சுத்தம் செய்து கரைகளை எடுக்கும் .ஒரு பயோ சலவையகம் கூட துவக்கலாம்.
சிறு நெருஞ்சில் பசுமையான புல் தரைகளிலும், மற்ற இடங்களிலும் தரையோடு தரையாக படர்ந்து வளரும். இதனுடைய இலைகள் பார்ப்பதற்கு புளிய இலைகள் போல் இருக்கும். ஆனால் அவற்றை விட சிறிய அளவிலும், பூக்கள் ஐந்து இதழ்களிடன் மஞ்சள் நிறமாக சிறியதாகவும் இருக்கும்.
பெரு நெருஞ்சில் சிறு செடி வகுப்பைச் சேர்ந்தது. இதன் இலைகள் அகலமாகவும், பெரியதாகவும் இருக்கும்..இவை குணத்தில் மாறுபடுவதில்லை. இதன் இனப்பெருக்கம் விதைமூலம் செய்யப்படுகிறது.
இது குளிர்ச்சி உண்டாக்கி , சிறுநீர் பெருக்கி , உரமாக்கி , உள்ளழலகதறி ,ஆண்மைப்பெருக்கி
நாம் உண்ணும் உணவின் சாரத்தின் பகுதி சிறு நீரகத்தில் நீராக பிரிக்கப்பட்டு சிறுநீராய் வெளியாகிறது. இந்நீரில் பல வகைப்பட்ட உப்புகள் நிறைந்திருக்கின்றன. இவ்வுப்புகள் சில வேளை சிறுநீரகத்தில் தங்கி உறைந்து பெருத்து வளர்கிறது. இதுவே கல்லடைப்பு நோயாகும். நெருஞ்சில் கல்லடைப்பு, நீரடைப்பு, நீர் எரிச்சல், நீர் வேட்கை, வெள்ளை நோய், வெப்ப நோய், சொட்டு நீர் முதலியவற்றை நீக்கும் குணமுடையது.
உடம்பு எரிச்சல், வெண் புள்ளி, மேகம் முதலியவற்றை யானை நெருஞ்சில் தீர்க்கும் குணமுடையது. ஆனை நெருஞ்சில்: மலட்டுத் தன்மை, வெள்ளை, நீர்க்கடுப்பு, விந்தணு பெருக்குதல். இவைகளை தரும் . இது ஒரு சும்மா கிடைக்கும் வயகரா .!
சாப்பிட்டுப்பார்த்தால் தான் தெரியும் அதன் வலிமை. நம்மிடையே இருக்கும் ஆண்மை பெருக்கி மருந்துகள் பல இன்னும் சரிவர பயன்படுத்தாமல் இருக்கிறது .நெருஞ்சல் வித்தினைப் பாலில் புட்டவியல் செய்து உலர்த்தி பொடி செய்து வைத்துக் கொண்டு காலை, மாலை கொடுத்து வரத் தாது கட்டும்.
இது ஒரு ஊக்கி மருந்து ஆகும்
நெருஞ்சில் செடி இரண்டு வேருடன் பிடங்கி, ஒரு பிடி அருகம்புல்லுடன் சட்டியில் போட்டு ஒரு லிட்டர் நீர்விட்டு அரை லிட்டராகச் சுண்டக் காய்ச்சி குடி நீராகப் பயன்படுத்தலாம். 50 மி.லி.அளவு இரு வேளை மூன்று நாள் வெறும் வயிற்றில் குடித்து வர உடல் வெப்பம் தணியும், கண் எரிச்சில், நீர் வடிதல், சிறு நீர் சொட்டாக வருதல் குணமாகும்.
நாட்பட்ட வெள்ளை நோயுடன் கூடிய நீர் கடுப்பிற்கு நெருஞ்சில் காயையும், வேரையும் ஒரே அளவாக எடுத்துக் கொண்டு அதனுடன் பச்சரிசி கூட்டி கஞ்சி வைத்து அருந்தி வர குணமாகும்.
சிறு நெருஞ்சில் இலைகளைப் பறித்து வந்து, அதில் அரை லிட்டர் அளவு சாறெடுக்கவும். கீழாநெல்லி இலைகளைப் பறித்து அதிலும் அரை லிட்டர் சாறெடுக்கவும். இரண்டையும் ஒன்றாய்க் கலந்து, இதில் கால் கிலோ மஞ்சளை ஊறவைத்து உலர்த்திக் கொள்ளவும். இத்துடன் சம அளவு சிறுபீளை வேர், சீந்தில் இலை, வில்வ இலை, தென்னம்பாளை அரிசி ஆகியவற்றைக் கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும். இதில் கால் ஸ்பூன் வீதம் தேனில் குழைத்துச் சாப்பிட்டு வர, சிறுநீரகங்களைப் பற்றிய நீர்க்கடுப்பு, நீர் எரிச்சல், நீரடைப்பு, சதையடைப்பு, கல்லடைப்பு, சிறுநீரில் ரத்தம் வெளியாகுதல், சிறுநீரில் சீழ் உண்டாகுதல், சிறுநீர் அடிக்கடி கழிதல் சிறுநீரகச் செயற்பாடு குறைவு போன்ற குறைகள் நீங்கி, சிறுநீரகம் செழுமையாய் செயற்படும். டயாலிசிஸ் செய்தது லக்ஷக்கணக்கில் பணத்தையும் உடல் நலத்தையும் இழக்கவேண்டாம்.
இதனை எளிய மருந்தாய் எண்ணி உதாசீனப்படுத்த வேண்டாம். சித்தர்களின் சுவடிகளில் சொல்லப்பட்ட அரிய மருத்துவ முறை இது.சிறிது சிரத்தை எடுத்தால் சீரும் சிறப்புமாக சிறு சிறுநீரகததைப் பற்றி கவலைப் படாமல் வாழலாம்!

கத்தரிக்காய்:- வாங்கலியோ;- கத்தரிக்காய்

கத்தரிக்காய்:- வாங்கலியோ;- கத்தரிக்காய்
கத்தரிக்காய் ஒரு மூலிகை என்பது பலருக்கு தெரியாது.
எனவே தான் சித்தர்கள் மரியாதையுடன் பத்தியக் கறி என்று இதனை அழைக்கிறார்கள்.
நம் இலக்கியங்களில் இதுவே வழுதுணங்காய் என அழைக்கப்படுகிறது.
ஆஸ்துமா, ஈரல் நோய், காசம் போன்ற தீவிரமான நோய்களுக்கு இலக்கானவர்களுக்கு வலிமை தரக்கூடியது இது.
இதனை வற்றல்போல் செய்து நல்லெண்ணெயில் பொறித்து உண்டால் உடலுக்குத் தேவையான வெப்பசக்தி கிடைக்கும்.
தாது பலவீனமாகி, இல்வாழ்வில் உடல்சோர்வை போக்கும்.
ஈரல் வலிமை குன்றி இருந்தால், ஈரல் சோர்வைப் போக்கும்.
கத்தரிப்பழத்தை ஊசியினால் குத்தி நல்லெண்ணெயில் வதக்கி மிளகுத்தூள், உப்பு தூவி உண்டால் பல் நோய்கள், அஜீரணம் நீங்கும்.
வாய்வுக் கோளாறு குறையும்.
பித்தம் போகும்.
மனிதர்களுக்கு மட்டுமின்றி, மாடுகளுக்கு வரும் வயிற்று வலி, வயிற்றுப்புழுக்கள், வயிறு உப்புசம் ஆகியவற்றுக்குக் கத்தரிக்காயைத் தணலில் சுட்டுச் சிறிது பெருங்காயம் கூட்டி மாடுகளுக்குக் கட்டினால், அந்நோய்கள் விலகும்.
தோல் சம்பந்தப்பட்ட நோய் உடையவர்கள் மட்டும் கத்தரிக்காயைச் சேர்க்கக்கூடாது.
தோல் நோய்க் காரணங்களை இது மிகுவிக்கும்.
மூர்த்தி சிறியதாயினும், கீர்த்தி பெரியது என்னும் பழமொழிக்குச் சரியான எடுத்துக்காட்டு கத்தரிக்காய்.
நீர்ச்சத்து அதிகம் கொண்ட கத்தரிக்காயில் வைட்டமின்கள்
ஏ, சி, பி1, மற்றும் பி2, காணப்படுகின்றன.
வாதநோய், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், கீல்வாதம், சளி, பித்தம், தொண்டைக்கட்டு, மலச்சிக்கல், கரகரப்பானகுரல், உடல் பருமன் முதலியவற்றைக் குணப்படுத்தும் காய்கறிகளுள் கத்தரிக்காயும் ஒன்று.
கத்தரிக்காய் பிஞ்சாகச் சாப்பிடுவதே நல்லது.
முற்றிய பெரிய காய்களைச் சாப்பிட்டால் உடம்பில் அரிப்பு ஏற்படும்.
குறிப்பாக, வீட்டிலே வளர்த்துப் பிஞ்சாகப் பறித்துச் சாப்பிட
வேண்டிய காய்களுள் இதுவும் ஒன்றாகும்.
முற்றிய காய்கள் உடல் வளர்ச்சிக்குப் பயன்படும்.
காரணம், இவற்றில் வைட்டமின் ‘ஏ’ அதிக அளவில் இருக்கிறது.
ஆனால், அளவாகத்தான் பயன்படுத்தவேண்டும்.
இதனால் கண்பார்வைத் திறனும் அதிகரிக்கும்.
உடலுக்கு சூடு தரும் காய்கறி இது.
எனவே, மழை நேரத்தில் கூட இரவு நேரத்தில் உடல் கதகதப்பாய் இருக்கக் கத்தரிக்காய் குழம்பு சமைத்து உண்ணலாம்.
கத்தரி வற்றலும் உடம்பில் சூட்டை ஏற்படுத்தும்.
நீர்க்கனத்தைக் குறைக்கும்.
உடல் பருமனைக் குறைக்கும்.
உடம்பில் சொறி சிரங்கு, புண் உள்ளவர்கள் கத்தரிக்காயைத் தவிர்ப்பது நல்லது.
உடலுக்குச் சூடு தரும் காய் என்பதால் அரிப்பை உண்டு பண்ணிப் புண்கள் ஆற அதிக நாள் ஆகும்.
மற்றவர்கள் மருந்தைப்போல் கத்தரிக்காயை உணவில் சேர்த்து உடலுக்கு நன்மை பெற வேண்டும்.
இக்காய் இளம் பிஞ்சாய் இருந்தால், சமையலில் சேர்த்து நாம் சாப்பிடும் மற்ற உணவுகள் விரைந்து சிதைந்து சத்தாக உடலுக்குக் கிடைக்க இது பயன்படும்.
வீட்டில் நன்கு உரமிட்டு வளர்க்கப்படும் கத்தரிச்செடியில் உள்ள பிஞ்சு உடலுக்கு வளத்தையும் வலிமையையும் தவறாமல் தரும்….