நல்ல ரெத்தம் ஊற, நல்லா செறிமானமாக, பொம்பளைகளுக்கு வீட்டுக்குத் துரமா போறது முன்னப்பின்ன இல்லாம சீரா இருக்க, ஒரே மருந்தாத் தாரேன்னு ஆராவது சொன்னா நம்பாதீக பேரப்புள்ளைகளா… அது மருந்து இல்ல,
தீம்பண்டம். தெனமும் புள்ளைகளுக்கு அம்பது நூறுனு கேக்கு, சிப்சுன்னு வாங்கிக் குடுக்குறதுக்கு பதிலா, வீட்டுலயே இதச் செஞ்சு குடுங்க. தீம்பண்டத்துக்குத் தீம்பண்டமாச்சு, பிள்ளைகளுக்கு ஒடம்பும் நல்லா கின்னுனும் வளத்தாப்ல ஆச்சு. அதுக்குப் பேருதேன்
பொரிவிளங்கா.
ஒடனே பேத்திக வந்து எப்ப்டி செய்யிறதுனு தெரியாதுல கெழவினு வெரட்டுறதுக்குள்ள நானே சொல்லிப்புடுறேன்.
பாசிப்பயறு, அரிசி ரெண்டையுஞ் சேத்து வறுத்து, அதோட கொஞ்சம் சுக்கும், ஏலக்காயும் போட்டு நல்லா இடிச்சு…. ம்ம்கும்… பேத்திக இடிச்சா விடிஞ்சுரும், சரித்தா… அரைச்சு… ( பேத்திகளுக்குச் சிரிப்பப் பாரு ) எடுத்துட்டு வந்து, அதுல பொரிகடல கொஞ்சம் அரைக்காம சேத்து, அதுல வெல்லப் பாகு ஊத்தி பெசஞ்சு பெசஞ்சு உருண்டை உருண்டையா உருட்டி வைங்க தாயிகளா. செத்த நேரத்துல நல்லா கட்டியா இறுகிரும். சாயந்தரம் பிள்ளைக பள்ளிக்கூடம் விட்டு வந்ததும் ஒரு உருண்ட குடுத்துப் பாருங்க. பிள்ளைக எம்புட்டு திடமா வளருதுன்னு ஒரு ஆறு மாசங் கழிச்சு கெழவிட்ட வந்து சொல்லுங்க தாயி.
இந்த வேலைக்குப் போற பேத்திக கூட ஒத்த உருண்டைய கைப்பயிக்குள்ள போட்டுட்டுப் போயி சாயந்தரம் ஒன்னச் சாப்புடுங்க வீட்டுக்கு வந்ததும் அலுப்பே தெரியாது.
ஒங்க எல்லாரையும் கும்புட்டுக் கேட்டுக்கிறேன். இந்த ஆர்லிக்சு பூச்டு வாங்கி, ரெத்தஞ்சிந்தி ஒழச்ச துட்ட வீணாக்காதீங்க.
No comments:
Post a Comment